‘போர் தொழில்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் ராஜா தற்போது நடிகர் தனுஷை வைத்து ‘கர’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ், ஜெயராம், சுராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் காப்பியை இயக்குநர் விக்னேஷ் ராஜா தயாரித்து தயாரிப்பு நிறுவனத்தினரிடம் திரையிட்டு காட்டியதாக கூறப்படுகிறது. படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது என்றாலும், அதன் மொத்த நீளம் சுமார் மூன்று மணி நேரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் திரைப்படத்தின் நீளம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, அதை சற்று குறைத்து திரையிடலாம் என தயாரிப்பு நிறுவனம் இயக்குநரிடம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வேண்டுகோளை இயக்குநர் விக்னேஷ் ராஜாவும் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த மூன்று மணி நேர நீளமான படத்தை சுமார் இரண்டு மணி நேரம் முப்பது நிமிடங்களுக்கு உட்பட்டதாக மாற்றும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
