மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படத்தை இயக்குனர் ராஜமவுலி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கின்றார். மேலும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார். 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கென்யாவில் நடைபெற்றது.
அந்த படப்பிடிப்பு அனுபவத்தை நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “‘வாரணாசி’ படத்திற்காக கென்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்போது காட்டெருமைகளின் கூட்டத்திற்குள் நின்றபடியே நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம். வனவிலங்குகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் தருணத்தில், அவற்றின் கூட்டத்தின் நடுவிலேயே நானும் மகேஷ் பாபுவும் நின்றிருந்தோம். நான் வாழ்க்கையில் பார்த்த மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக அது அமைந்தது. அந்த விலங்குகளின் முகங்களைப் பார்க்கும்போதும், பல ஆண்டுகளாக அவற்றின் இனங்கள் அங்கே வாழ்ந்து வருகின்றன என்பதை நினைத்தபோதும் ஒரு பெருமையான உணர்வு ஏற்பட்டது. காட்டில் அவற்றை நேரில் பார்க்கும்போது அந்த இடத்தின் ஆழமான தன்மையை உணர முடியும். இது உண்மையிலேயே மறக்க முடியாத இனிமையான அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக இதே அனுபவம் குறித்து நடிகர் மகேஷ் பாபுவும் பேசியிருந்தார். அதில் அவர், “இந்த அனுபவத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஆரம்பத்தில் விலங்குகளுக்கு நடுவே இருப்பது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கே கேமராக்கள் இருப்பதோ அல்லது மற்றவர்கள் இருப்பதோ கூட கவனத்திற்கு வரவில்லை. அந்தப் பெருங்காட்டின் நடுவே நாங்கள் மட்டும் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.
