நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘துப்பாக்கி முனை’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் தினேஷ் செல்வராஜ். இவர் பிரபல கதாசிரியர் அன்னக்கிளி செல்வராஜின் மகன் ஆவார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தந்தை எழுதிய ‘கடல்கன்னி’ என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கடல் கன்னியாக நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். அவருடன் நடிகைகள் சுனைனா, முனீஷ்காந்த், பிரித்வி, ஜோசிகா மாயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். குழந்தைகளை மையமாகக் கொண்ட பேண்டசி திரைப்படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ திரைப்படத்திற்கு இசையமைத்த ஜெர்சி சில்வஸ்டர் வின்செண்ட் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை செய்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள மனப்பாடு கடற்கரையில் படமாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள அண்டர்வாட்டர் காட்சிகள் சென்னை நகரில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கதையின் மையத்தில் ஒரு ஆதரவற்றோர் விடுதியில் வசிக்கும் நீலன் என்ற சிறுவன் இருக்கிறான். அந்தச் சிறுவன் ஆண்ட்ரியா எழுதிய ‘ஜோகி’ என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்குகிறான். அந்தப் புத்தகத்தில் வரும் கதையின் முக்கியமான கதாபாத்திரம் கடல் கன்னி ஜோகி. “கடலில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருப்பது கடல் கன்னிதான்” என்ற வரிகளைப் படிக்கும் போது அந்த சிறுவன் மனம் உருகி கண்கலங்குகிறான். மேலும் அந்தக் கதையில் வரும் கடல் கன்னியைத் தனது அம்மாவாகவே நினைக்கத் தொடங்குகிறான்.
இவ்வாறான சூழ்நிலையில் அந்த ஆதரவற்றோர் விடுதிக்கு எழுத்தாளர் ஆண்ட்ரியா வருகிறார். அவரைக் காணும் சிறுவன், கதையில் வரும் கடல் கன்னியை நேரில் பார்க்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறான். அந்த சிறுவனின் ஆசையை நடிகை ஆண்ட்ரியா எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே இந்த திரைப்படத்தின் முக்கியக் கதை என கூறப்படுகிறது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
