தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் இவர்களின் திருமணம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில், திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் அவர்களை சமாதானப்படுத்த பலமுறை முயற்சி செய்தாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் பிரிய முடிவு செய்ததாக தெரிகிறது. மேலும், இந்த தம்பதியினர் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலே தனித்தனியாக வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் இருவரும் மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். முதலில் நடிகை ஹன்சிகா மோத்வானி தானாகவே நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து மனுவை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த மனுவை விசாரித்த மும்பை குடும்ப நல நீதிமன்றம், இருவரின் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் இன்று விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், தனது விவாகரத்து விவகாரத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எந்த தொகையும் கேட்கவில்லை என்பதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
