கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரியோ ராஜ். அதன் பின்னர் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘ஆண்பாவம் பொல்லாதது’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும், அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ‘ராம் இன் லீலா’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் ரியோ ராஜ் ‘ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம் புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கதிரவன் சம்பத் எழுதி இயக்குகிறார்.
இந்தப் புதிய படத்தில் ராம் நிஷாந்த் மற்றும் ஜே.எஸ். கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்திற்கு ‘பிரவுன் மணி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புரோமோ காணொளியும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
—
