2019ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல பாராட்டுகளை பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘வாத்தி’ மற்றும் ‘விடுதலை 2’ போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மேலும் கவனத்தை ஈர்த்தார்.
கென் கருணாஸ் தற்போது இயக்குநராக ‘யூத்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘யூத்’ திரைப்படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. பள்ளி பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூ ஆகியோர் இந்த திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ‘யூத்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
