நடிகர் பரத் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தையும் இயக்குநர் ஸ்ரீசெந்தில் தான் இயக்கியுள்ளார். இதில் மீண்டும் பரத் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ‘பூவே உனக்காக’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை சங்கீதா இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில் இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான மற்றும் அதிரடி நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘காளிதாஸ் 2’ திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
