பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘மயிலா’… டீஸர் வெளியீடு!

‘அம்மணி’, ‘மாவீரன்’, ‘தண்டட்டி’, ‘அயலான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை செம்மலர் அன்னம். நடிகையாக மட்டுமல்லாமல் சில குறும்படங்களையும் இயக்கியுள்ள அவர் தற்போது முதன்முறையாக முழுநீள திரைப்படத்தை இயக்கியுள்ளார். ‘மயிலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கை போராட்டங்களை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை, அவளது சிறிய மகளின் பார்வையில் இருந்து சொல்லும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் 55வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பிரைட் ப்யூச்சர்’ பிரிவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் ஆசிய திரைப்படங்களையும் திரைப்பட படைப்பாளர்களையும் கௌரவிக்கும் நெட்பாக் விருதிற்கும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 8) வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் செம்மலர் அன்னம் கூறுகையில், “நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் வாழ்க்கையை கவனித்து பார்த்ததில் இருந்து அவர்களின் உணர்வுகளால் உருவான கதை தான் ‘மயிலா’. பல பெண்கள் வாழ்க்கையில் பெரிய பொறுப்புகளை சுமந்தாலும் அதற்கான அங்கீகாரம் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அவர்களின் பொறுமை, மரியாதை மற்றும் உறுதியே இந்த கதைக்கு பெரிய ஊக்கமாக அமைந்தது. மகளிர் தினத்தில் இந்த டீசரை வெளியிடுவது மிகவும் அர்த்தமுள்ளதாக உணர்கிறேன். ஏனெனில் இந்த திரைப்படம் பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பல அம்சங்களை கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading