இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் ஷிவதா நடித்த ‘தடயம்’ என்ற வெப் தொடர் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் வெற்றியை சென்னையில் படக்குழுவினர் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “ஒவ்வொரு மனிதரின் மனமும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனதிற்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரிசெய்த மாதிரியான ஒரு உணர்வை தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் உண்மையான மகிழ்ச்சி” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3,000 எபிசோடுகள் இயக்கி இருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையான பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு மிகவும் அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். அதனைத் தொடர்ந்து, “இப்படிப்பட்ட வெற்றிகள் நல்ல படைப்பாளிகளுக்கு பெரிய உந்து சக்தியாக அமைகின்றன. இந்த வெற்றிக்காகத்தான் சினிமாவில் இத்தனை போராட்டங்கள் நடைபெறுகின்றன. இன்னும் இந்த சினிமாவுக்கு நிறைய வெற்றியாளர்கள் வர வேண்டும்” என்றும் சமுத்திரக்கனி தெரிவித்தார்.
