பாலிவுட்டின் பிரபல நடிகர் நானா படேகர் தனது 75வது வயதில் இன்று காலமானார். இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த அவர், ஒரே ஒரு படத்தை இயக்கியதுடன் அதற்காக உண்மையான ராணுவப் பயிற்சியையும் பெற்றுள்ளார்.
1991-ல் வெளியான ‘பிரஹார்: தி பைனல் அட்டாக்’ படத்தை இயக்கிய நானா படேகர், அதில் மேஜர் பிரதாப் சவுகான் கதாபாத்திரத்திலும் நடித்தார். படத்தில் வரும் ராணுவக் காட்சிகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய ராணுவத்துடன் இணைந்து மராத்தா லைட் இன்பெண்ட்ரி பிரிவில் சுமார் மூன்று ஆண்டுகள் கடுமையான கமாண்டோ பயிற்சி பெற்றார். சண்டைக் காட்சிகளுக்கு டூப் பயன்படுத்துவதையும் அவர் விரும்பவில்லை.
ராணுவப் பயிற்சியில் தீவிரமாக பங்கேற்றதால் வீரர்கள் மத்தியில் மதிப்பைப் பெற்ற நானா படேகருக்கு ஆரம்பத்தில் கேப்டன் பதவியும், பின்னர் லெப்டினென்ட் கர்னல் பதவியும் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1999-ம் ஆண்டு கார்கில் போரின்போதும் ராணுவத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. போர் முனையில் விரைவுப்படை குழுவின் ஒரு பகுதியாக அவர் சேவையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
