நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘கெணத்த காணோம்’. இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிகை லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். சமூகத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை உருவாக்கும் இயக்குநராக அறியப்படும் சுரேஷ் சங்கையா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு ‘ஒரு கிடாவின் கருணை மனு’ மற்றும் ‘சத்ய சோதனை’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளன. இப்படத்திற்கு வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில் ‘கெணத்த காணோம்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். டிரெய்லரில் தண்ணீர் பஞ்சம் நிலவும் ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டு கதை அமைந்துள்ளதாக காட்டப்படுகிறது. அந்த கிராமத்தில் கோவில் பூசாரியாக யோகி பாபு நடித்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கிராம மக்கள் தோண்டும் குழி காரணமாக ஒரு பெரிய பிரச்சனை உருவாகிறது. அந்த பிரச்சனையின் விளைவாக முழு கிராமத்தையும் காலி செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. அந்த சூழ்நிலை எதனால் உருவாகிறது, அதன் பின்னர் என்ன நிகழ்கிறது என்பதையே இந்த திரைப்படம் கதையாக எடுத்துரைக்கிறது. மேலும் ‘கெணத்த காணோம்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
