மாலி அன்ட் மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ் மற்றும் டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. இந்தப் படத்தை இயக்குநர் விஜய் இயக்கியுள்ளார். மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா மேற்கொண்டுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படம் வருகிற 6ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய ஜியா சங்கர், “இந்த திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பானதாகும். வாழ்க்கையில் ஒரு நல்ல வாய்ப்பிற்காக நீண்டநாட்கள் காத்திருந்தேன். இயக்குநர் விஜயை சந்தித்தபோது, அவர் என்னிடம் முழு நம்பிக்கை வைத்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்தப் படத்தில் பணியாற்றியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சிறந்த அனுபவமாகும். தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு. அந்த கனவை தமிழிலிருந்து தொடங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இயக்குநர் விஜய் ஒரு திறமையான இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் ஆவார். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு கலைஞருக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவார். அனைவரிடமும் அக்கறை காட்டுவார். என் வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என் தாயார் தான். அவருக்குப் பிறகு எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் இயக்குநர் விஜய். இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு திரையரங்கத்தை விட்டு வெளியேறும் போது, ரசிகர்களின் மனதில் நாங்கள் ஒரு இடத்தை பிடித்திருப்போம் என்று நம்புகிறேன்” என்றார்.
