சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். திரைப்படப் பணிகளுக்கு இடையில் பல கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, ரஜினி குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவர் கூறியதாவது, இன்றைய இளைஞர்கள் 22, 23 வயதிலேயே உதவி இயக்குநர், எழுத்தாளர் போன்ற பணிகளில் சேர்கிறார்கள். சில மாதங்கள் பணியாற்றியவுடன் சோர்வு, இடைவேளை வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றார்.
சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தபோது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தனது திரைப்படத் திட்டங்களை அவர் தெளிவாக பகிர்ந்துகொண்டதாக கூறினார். 75 வயதிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இலக்குகளை வைத்திருக்கும் ஒருவரின் உற்சாகம் அனைவருக்கும் முன்மாதிரி என்றும், இளைஞர்கள் மன அழுத்தத்தை ஓரமாக வைத்து தங்கள் இலக்கை நோக்கி பாடுபட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
