இசையமைப்பாளர் அனிருத் கடந்த 15 ஆண்டுகளாகத் திரைத்துறையில் தொடர்ந்து இசைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பாடகர், இசையமைப்பாளர், இசை ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு துறைகளில் தன்னை நிரூபித்துள்ள அவர், இந்திய அளவில் செல்வாக்கு மிக்க இளம் கலைஞர்களில் ஒருவராக விளங்குகிறார். மேலும், உலகின் பல நாடுகளில் இசைக்கச்சேரிகள் நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
தனது இசைப் பயணத்தில் நூற்றுக்கணக்கான வெற்றி பாடல்களை வழங்கியுள்ள அவர், குறிப்பாக பின்னணி இசையில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவரது பின்னணி இசைகள் அதிக கவனம் பெறவில்லை என்றாலும், அதை உணர்ந்து தற்போது அந்த துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
‘லியோ’ திரைப்படத்திற்குப் பின்னர் ‘ஜெயிலர்’, ‘விடாமுயற்சி’, ‘கூலி’ போன்ற படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. சமூக வலைதளங்களில் அவை அதிகம் பயன்படுத்தப்பட்ட இசைகளாகவும் சாதனை படைத்தன. மேலும், ரஜினியின் 173வது திரைப்படம், ரஜினி–கமல் இணைப்பு படம், அல்லு அர்ஜுன்–லோகேஷ் கனகராஜ் திரைப்படம், நானியின் ‘பாரடைஸ்’ ஆகிய படங்களுக்கான அறிமுகப் புரமோ இசையையும் உருவாக்கி பாராட்டைப் பெற்றுள்ளார்.
