நான் நடித்தாலும், இயக்குனர் என்பதை ஒருபோதும் மறக்கவில்லை -நடிகர் சமுத்திரக்கனி

நடிகர் சமுத்திரக்கனி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் முதல்முறையாக ‘தடயம்’ என்ற வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1990களில் ஆந்திராவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், குற்றத் திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. இதனை நவீன்குமார் பழனிவேல் இயக்கியுள்ளார்.

இந்த வெப்சீரிஸைப் பற்றி சமுத்திரக்கனி கூறுகையில், “நான் இதுவரை 42க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். அதேபோல், நான் முதன்முறையாக நடித்துள்ள இந்த வெப்சீரிஸிலும் போலீஸ் கதாபாத்திரம்தான். 69 கொலைகள் செய்த ஒருவருக்கு ஆதரவாக இருப்பது போல் தோன்றினாலும், இந்தக் கதை பல பரிமாணங்களை எடுத்துரைக்கிறது. சமீபகாலமாக நான் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடித்து வருகிறேன். அங்கு வேலை செய்வது சற்றே வசதியாக இருக்கும். ஹீரோக்கள் தாமதமாக வந்து சீக்கிரமே சென்று விடுவார்கள். என்னைப் போன்ற நடிகர்களுக்கு அதிகமான வேலை இருக்காது. ஆனால், இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது.

இந்த தொடரில் ஷிவதாவும் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். ‘கருடன்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் என்னுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த நிலைக்கு செல்வார். செங்கல்பட்டு அருகே இந்த தொடரின் படப்பிடிப்பு நடைபெற்றது. படக்குழுவினரும் உதவி இயக்குநர்களும் அங்கு வீடு எடுத்து தங்கி முழு நேரமாக வேலை செய்தனர். நான் இயக்குநராக திரைப்படம் இயக்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘வினோதய சித்தம்’, ‘ப்ரோ’ போன்ற படங்களுக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் தற்போது ‘ஸ்கூல் பஸ்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். அது விரைவில் வெளியாக உள்ளது; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். நான் நடிப்பில் கவனம் செலுத்தினாலும், என்னுள் இருக்கும் இயக்குநரை மறக்கவில்லை. அதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading