சென்னையில் நடைபெற்ற அவள் ஐகான் விருது வழங்கும் விழாவில் நடிகை சினேகாவிற்கு கரு. பழனியப்பன் விருது வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சினேகா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். “நான் சினிமா உலகிற்கு புதிதாக வந்திருந்த போது, மூன்றாவது ஆண்டிலேயே மிகப்பெரிய விபத்தில் சிக்கிக்கொண்டேன். அந்த விபத்தில் என் கை, கால், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. நான் மீண்டும் எழுந்து நடப்பதற்கே குறைந்தது எட்டு மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த கடினமான நேரத்தில் ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தின் கதையை கரு. பழனியப்பன் என்னிடம் கூறினார். அப்போது நான், ‘இந்த நிலையில் என்னிடம் நீங்கள் எந்த நம்பிக்கையில் கதை சொல்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இன்னும் ஒரு மாதத்தில் நீங்கள் நன்றாக நடக்க ஆரம்பித்து விடுவீர்கள்’ என்று உறுதியளித்தார். அவர் அளித்த அந்த நம்பிக்கையே எனக்கு பெரிய ஊக்கமாக அமைந்தது. அதன்பேரில் ஒன்றரை மாதங்களுக்குள் நான் ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
அந்த திரைப்படத்திற்கு பலருக்கும் விருதுகள் கிடைத்தன. ஆனால் எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதில் அப்போது மிகவும் வருத்தமடைந்தேன். அந்த படத்திற்கே அல்லாமல், ‘ஆட்டோகிராப்’, ‘பள்ளிக்கூடம் பட்டாசு’ போன்ற படங்களுக்கும் எனக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் அதற்கு பழகி விட்டேன். விருதுகளை விட மக்களின் மனதில் நிலைத்து நிற்பதுதான் உண்மையான சாதனை என்று நான் நம்புகிறேன்” என்று உருக்கமாகப் பேசியார்.
