நடிகர் சூரி கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கியதிலிருந்து, கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார். நகைச்சுவை நடிகராக இருந்த அவரின் பாதை, தற்போது கதாநாயக மையப்படங்களின் மூலம் புதிய திருப்பத்தை பெற்றுள்ளது.
தற்போது ‘மண்டாடி’ என்ற திரைப்படத்தில் சூரி மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம், மீனவர்கள் மத்தியில் நடைபெறும் படகு போட்டியை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதற்கு முன் அவர் நடித்த திரைப்படங்களை விட, இந்த படத்தின் தயாரிப்பு செலவு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. கதை மற்றும் காட்சியமைப்பில் பெரும் அளவில் தயாராகும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்குப் பிறகு, ‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் கதைக்களம் 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
