இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு திரைப்படம் ‘வாரணாசி’. இந்த திரைப்படத்தை உலகளாவிய அளவில் வெளியிடும் நோக்கில் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இரண்டு முறை இந்த திரைப்படம் தொடர்பாக உலக அளவிலான ஊடகங்களுக்கு படக்குழுவினர் பேட்டிகள் வழங்கியுள்ளனர். திட்டமிட்ட இடைவெளிகளில் இப்படத்தை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் படக்குழு செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய இடைவெளிக்குப் பிறகு, அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர் மகேஷ் பாபு ஏற்கனவே அங்கு பயணம் செய்துள்ளார். பனியால் மூடப்பட்ட மலைகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் சூழப்பட்ட இயற்கை அழகுகள் ஜார்ஜியாவில் அதிகம் காணப்படுவதால், அந்த காட்சிகள் படத்தின் தரத்தையும், காட்சியமைப்பையும் மேலும் உயர்த்தும் என்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் கென்யா நாட்டிலும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன. மேலும் ஒரிசா மாநிலத்திலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜார்ஜியாவில் நடைபெறும் படப்பிடிப்பு முடிந்த பின், மேலும் சில உலக நாடுகளில் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
