நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய கதாபாத்திரத் தேர்வில் தனித்துவத்தை காட்டி திரைத்துறையில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தமிழில் தொடங்கிய இவரது பயணம் பின்னர் தெலுங்கு திரையுலகிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு பல திரைப்படங்களில் நடித்தும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது முதன்முறையாக இயக்குநராகவும் அறிமுகமாகி ‘சரஸ்வதி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாதில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய வரலட்சுமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் கோபிசந்த் மாலினேனிக்கு நன்றி தெரிவித்தபோது உணர்ச்சி வசப்பட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஆரம்ப காலத்தில் தமக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், கொரோனா காலத்திற்குப் பிறகு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததாக கூறினார். அந்த மாற்றத்திற்கு காரணம் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்கிய ‘கிராக்’ திரைப்படத்தில் தமக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கியதே என்று குறிப்பிட்டார்.அந்த திரைப்படத்திற்குப் பிறகு தமக்கு பல திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததாகவும் அவர் கூறினார். “இன்று நான் நிற்கும் இந்த இடத்திற்கு காரணம் நீங்கள் தான். என் திரையுலகப் பயணத்தை மீண்டும் தொடங்க வைத்து உண்மையான பாதையை கொடுத்தவர் நீங்கள்” என்று கூறி கண்கலங்கினார்.
