தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் நடைமுறை உள்ளது. தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், 2026 முதல் 2029 வரை பணியாற்றவுள்ள புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (பிப்ரவரி 22) காலை சென்னை நகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் தொடங்கியது.
இந்தத் தேர்தலில் முரளி ராமசாமி அணியும், தமிழ் குமரன் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. தலைவர், செயலாளர், பொருளாளர், இரண்டு துணைத் தலைவர், இரண்டு இணைச் செயலாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். ரஜினிகாந்த், விஷால், டி. ராஜேந்தர், மோகன், குஷ்பு உள்ளிட்ட மொத்தம் 1,171 பேர் வாக்களித்தனர். மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவடைந்ததும், அதன் பின்னர் 6 மணிக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று, 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுவரை நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களின் வரலாற்றில் தலைவர் பதவிக்காக அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையையும் தமிழ்குமரன் பெற்றுள்ளார்..
