இயக்குநர் சமுத்திரக்கனி தமிழ் திரையுலகில் பல குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கியவர். ‘நாடோடிகள்’, ‘அப்பா’, ‘போராளி’, ‘நிமிர்ந்து நில்’, ‘வினோதய சித்தம்’ போன்ற படங்கள் அவரது இயக்கத்தில் வெளியாகி கவனம் பெற்றன. சமூக கருத்துகளையும் உணர்வுகளையும் பேசும் கதைகளால் அவர் தனித்துவமான இயக்குநராக அறியப்பட்டார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இயக்கத்துடன் சேர்த்து நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து பிஸியாக உள்ளார்.
இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘வினோதய சித்தம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு அவர் எந்த புதிய இயக்குநர் திட்டத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் ஒரு சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படத்தை அவர் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார் என்றும் கூறப்படுகிறது.
