இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தமிழ்த் திரையுலகில் பெரும்பாலும் கிராமப்புற வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைகளில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். அவருடைய திரைப்படங்களில் சாதாரண மக்களின் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் சமூகப் பின்னணிகள் பிரதிபலிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது படங்களுக்கு தனித்துவமான ரசிகர் வட்டமும் உருவாகியுள்ளது.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மை லார்ட்’ திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூகத்தின் இரு நிலைகளையும் பேசும் விதத்தில் அமைந்த இந்த படம் குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அந்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது சசிகுமார் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்த புதிய திரைப்படத்தில் அவர் முதல்முறையாக காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு அவர் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பதால் ரசிகர்களிடையே இந்த படம் குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.நீண்ட வருடங்களுக்கு முன்பு ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மணிகண்டன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சமீபத்தில் வெளியான ‘கப்புல் பிரண்ட்லீ’ திரைப்படத்தில் நடித்த மானசா வாரணாசி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
