தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பால் தனி இடத்தைப் பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். பல்வேறு விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதன் மூலம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் தனக்கென ஒரு மரியாதையை உருவாக்கியவர். சமீபத்தில் அவர் நடித்த ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் அந்த படத்தில் விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பு குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த பதிவில் அவர் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். அதில், “சில நேரங்களில் மௌனம் என்பது தயாராகிக் கொள்வதற்கான காலமாக இருக்கும். என்னை உண்மையாக ஈர்க்கும் கதைகளை எதிர்பார்த்து நான் காத்திருந்தேன். தற்போது நான் மிகவும் மதிக்கும் நான்கு இயக்குநர்களுடன் புதிய திரைப்படங்களை தொடங்க உள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையுடன் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
விக்ரமின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்க உள்ளார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ‘இருமுகன்’ திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் சங்கருடன் மீண்டும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்ததாக ‘மகான்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அவரது வரவிருக்கும் படங்கள் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
