நடிகர் பிரபாஸின் விருந்தோம்பல் குறித்து பலரும் பல நேரங்களில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வந்துள்ளனர். அவருடைய அன்பான பண்பு குறித்து பல திரையுலகப் பிரபலங்களும் பேசுவது வழக்கம். ஒருமுறை நடிகர் சூர்யா அவரது வீட்டிற்கு சென்றபோது அளித்த விருந்தை மிகவும் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிற்கு வருபவர்களுக்கே அல்லாமல், படப்பிடிப்பு தளத்திலும் படக்குழுவினருக்கு ஆச்சரியமாக விருந்து அளிப்பதில் பிரபாஸ் ஆர்வம் கொண்டவர் என்றும் அவருடன் ‘ஆதிபுருஷ்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மும்பையில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது ஒருநாள் அதிகாலை முதலே நீண்ட நேரம் தொடர்ந்து வேலை நடந்தது. பல நாட்களாக மும்பை உணவுகளை சாப்பிட்டு வந்ததால் படக்குழுவினர் சற்று சலிப்படைந்திருந்தனர். அதை கவனித்த பிரபாஸ், “இன்று இரவு உங்களுக்காக சென்னை வகை உணவை ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதை கேட்ட அனைவரும் மும்பையிலேயே உள்ள ஏதாவது ஒரு சென்னை உணவகத்தில் இருந்து உணவு வரவழைப்பார் என நினைத்தனர். ஆனால் மாலை நேரம் கடந்தும் உணவு வராததால் அவரிடம் கேட்டபோது தான் உண்மை தெரியவந்தது. அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் உணவை வரவழைத்திருந்தார் என்பதை அறிந்ததும் படக்குழுவினர் அனைவரும் ஆச்சரியப்பட்டதாக கூறப்படுகிறது. சில நேரத்திற்குப் பிறகு உணவு வந்ததும் அனைவருக்கும் தன்னுடைய கையால் பரிமாறி மகிழ்ச்சியுடன் விருந்து அளித்ததாக அந்த தொழில்நுட்பக் கலைஞர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பிரபாஸின் அன்பான குணத்தையும் விருந்தோம்பலையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
