திரையுலகில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்தி பாராட்டிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

கன்னடத் திரையுலகின் முக்கியமான மூத்த நடிகர்களில் ஒருவர் சிவராஜ்குமார். புகழ்பெற்ற நடிகர் ராஜ்குமாரின் மகனாகிய அவர், பல ஆண்டுகளாக கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த அவர் தென்னிந்திய திரையுலக ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளார்.

தமிழ் திரைப்படங்களிலும் அவர் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ‘ஜெயிலர்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் கவனம் பெற்றார். தற்போது உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1986 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி அவர் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. அதுவே அவர் முதன்முறையாக மேக்கப் செய்து கதாநாயகனாக நடித்த நாள் என்றும் கூறப்படுகிறது. சினிமா துறையில் அவர் அறிமுகமானது முதல் தற்போது வரை 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பிரபல நடிகர் சிவராஜ் குமார், ஹாட்ரிக் ஹீரோ என அழைக்கப்படும் அவர் கன்னடத் திரைத்துறையில் நான்கு வெற்றிகரமான தசாப்தங்களை நிறைவு செய்துள்ளார். என் ஓய்வு நேரங்களில் அவரது பல திரைப்படங்களை பார்த்து ரசித்துள்ளேன். ரதசப்தமி, ஜனுமட ஜோடி, ஜோடி ஹக்கி, தகரு போன்ற வெற்றி படங்கள் மூலம் அவர் கன்னட சினிமாவின் பெருமையை உயர்த்தியுள்ளார். அவரது நடிப்புத் திறமைக்கு இணையானவர் அரிது.

கலைத்துறையில் மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் கன்னட மக்களின் அன்புக்குரிய சிவண்ணா அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் வழங்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.சிவராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமான ‘ஆனந்த்’ திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்த ‘ரதசப்தமி’ மற்றும் ‘மன மெச்சிந்த ஹுடுகி’ ஆகிய மூன்று படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் ரசிகர்கள் அவரை “ஹாட்ரிக் ஹீரோ” என்று அழைக்கத் தொடங்கினர். தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்துடன் சேர்த்து கன்னடத்தில் ‘உத்தரகாண்டா’ மற்றும் தெலுங்கில் ‘பெத்தி’ போன்ற படங்களிலும் அவர் நடித்துவருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading