சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழிலும் வெளியான இந்த படம் தெலுங்கு திரையுலகில் ஓரளவு நல்ல வசூலைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில் கதாநாயகியாக நடித்த மானசா வாரணாசியின் நடிப்பு பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் அவர் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கதையின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்திய விதம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் மானசா வாரணாசி குறித்து திரையுலகிலும் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: “இந்த படத்தின் இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் நடிகை சாய் பல்லவியின் தீவிர ரசிகர். எனவே இந்த கதாபாத்திரத்தை பற்றி என்னிடம் பேசும்போது முதலில் சாய் பல்லவி நடித்த படங்களை பார்க்குமாறு கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.அதன்படி சாய் பல்லவி நடித்த பல திரைப்படங்களை பார்த்ததாகவும், அவரது நடிப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தான் இந்த படத்தில் நடித்ததாகவும் மானசா வாரணாசி கூறியுள்ளார்.
