‘மை லார்ட்’ திரைப்படத்திற்கு இயக்குநர் ராம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொளியில், அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவன் ஒருபுறமும், அந்த அதிகார நிலையை இழந்து சமூகத்தின் விளிம்பு நிலையில் தள்ளப்பட்ட ஒருவன் மறுபுறமும் இருக்கும் சூழலை மையமாகக் கொண்டு இந்தக் கதை நகர்கிறது என்று கூறினார். சமூகத்தின் இரண்டு மாறுபட்ட நிலைகளையும் தைரியமாக வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த திரைப்படம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இந்த திரைப்படத்தின் கதையின் ஆழமும், திரைக்கதையின் வலிமையும் பாராட்டத்தக்கவை என்றும் இயக்குநர் ராம் தெரிவித்தார்.
இயக்குநர் ராஜு முருகன் மிகவும் துணிச்சலுடன் உருவாக்கிய படைப்பாக இது இருப்பதாகவும் அவர் பாராட்டினார். ஒரு சமூக உண்மையை நேர்மையாகவும் தைரியமாகவும் பதிவு செய்யும் முயற்சியாக இந்த திரைப்படம் திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.
நடிகர் சசிகுமார் குறித்து பேசும்போது, ‘அயோத்தி’ திரைப்படத்திற்கு பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ராம் கூறினார். அந்த மாற்றம் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும், தமிழ்நாட்டின் பல குடும்பங்களிலும் அவர் ஒரு நெருக்கமான உறுப்பினராக உணரப்படும்படி அந்த மாற்றம் அமைந்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
