ராப் பாடகராக தனது பயணத்தைத் தொடங்கியவர் ஹிப் ஹாப் ஆதி. பின்னர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து கவனம் பெற்றார். அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு வெளியான மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியது. தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு போன்ற திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
கல்லூரி வாழ்க்கை, இளமையின் கனவுகள், காதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாகவும் உணர்ச்சிகரமாகவும் சொல்லிய மீசையை முறுக்கு திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகம் பெற்ற வெற்றியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக மீசையை முறுக்கு 2 உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை ஹிப் ஹாப் ஆதி தானே இயக்கியும் நடித்தும் உள்ளார். சுந்தர் சி மற்றும் குஷ்பு இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த டீசரில் ஹிப் ஹாப் ஆதி மூன்று விதமான தோற்றங்களில் தோன்றுகிறார் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். மீசையை முறுக்கு 2 திரைப்படம் இந்த ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
