இந்தியில் நடிகர் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆதித்யா தார் இயக்கிய இந்த திரைப்படம் சுமார் 1300 கோடி வரையிலான வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி முடிந்துள்ளது. வருகிற மார்ச் 19ஆம் தேதி அந்த இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர், ‘துரந்தர்’ திரைப்படம் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “சமீப காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ‘துரந்தர்’ முக்கியமான ஒன்று. இந்த திரைப்படத்தை நான் இரண்டு முறை பார்த்துள்ளேன். இதில் நடித்த ஒவ்வொரு நடிகரும் தங்களது முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். கதையை மேலும் பெரிய அளவில் கொண்டு செல்லும் இரண்டாம் பாகத்தை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அனிமல்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் ராமன் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
