டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வித் லவ்’ கடந்த 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் அவருக்கு இணையாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளார்.
‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதன், இந்த ‘வித் லவ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சவுந்தர்யா ரஜினிகாந்தும் இணைந்து தயாரித்துள்ளனர். காதலை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பள்ளி வயதைக் களமாகக் கொண்டு நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், இளம் தலைமுறை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திரையரங்குகளில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பைப் பெற்று வரும் ‘வித் லவ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதன்படி, வெளியான முதல் 10 நாட்களுக்குள் இந்த திரைப்படம் ரூ.25 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
