தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 111வது திரைப்படத்தில் கோபிசந்த் மல்லேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை விரிந்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வரலாற்று பின்னணியில் அமைந்த பிரமாண்டமான ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் பணியாற்றுவார் என முன்பே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தின் கதை அதிக செலவினம் தேவைப்படுவதால், தயாரிப்பு தரப்பு கதையில் மாற்றங்களை செய்ததாக கூறப்படுகிறது. அதனால் மொத்த பொருட்செலவும் குறைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், நயன்தாரா ரூ.11 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்பட்டதால், திட்டமிட்ட பட்ஜெட்டில் படம் உருவாக்க சிரமம் ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு பதிலாக மற்ற கதாநாயகிகளை பரிசீலனை செய்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், நயன்தாராவே இப்படத்தில் உறுதியாக நடிக்கவுள்ளார் என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்காவது முறையாக பாலகிருஷ்ணா மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
