இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், சமீப காலமாக அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் நடைபெற்று வந்தது.
இந்த சூழலில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை காண திரண்டிருந்த ரசிகர்கள், அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், ஒரு ரசிகர் தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்திடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அந்த ரசிகரின் மகள் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளதாக கூறப்படுவதால், இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்குப் பிறகு, ‘டான்’ திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
