நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 26வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘தாய் கிழவி’ திரைப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது, இப்படத்திற்கு ‘சேயோன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் கதை முழுமையாக மதுரை பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்ற, ஒளிப்பதிவை விவேக் விஜயகுமார் மேற்கொள்கிறார்.
முன்னதாக வெளியான ‘அமரன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைவது முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.மேலும், இப்படத்தின் கொண்டாட்டம் நாளை (பிப்ரவரி 17) காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
