இயக்குநர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த ‘கில்லி’ திரைப்படம் 2004ஆம் ஆண்டு வெளியாகி 50 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், 2024ஆம் ஆண்டு இந்த திரைப்படம் மறுவெளியீடாக திரையரங்குகளில் வெளியிடப்பட்டபோது 30 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ‘கில்லி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாத சூழ்நிலையால் ‘கில்லி’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யா மூவீஸ் தயாரித்த இந்த திரைப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் 2024ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்தது. அதே நிறுவனம் பிப்ரவரி 20ஆம் தேதியும் வெளியிடுகிறது. கடந்த மாதம் வெளியான அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் மறுவெளியீட்டில் சிறப்பான வசூலைப் பெற்று, திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த திரைப்படம் 20 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ‘கில்லி’ திரைப்படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டு மறுவெளியீட்டில் ஏராளமான ரசிகர்கள் ‘கில்லி’ திரைப்படத்தை பார்த்துவிட்ட சூழலில், இம்முறை அது எவ்வாறு வரவேற்பைப் பெறும் என்பது கேள்வியாக உள்ளது. நடிகர் விஜயின் ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீட்டில் ஓரளவு லாபம் ஈட்டியது. ஆனால் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ‘மெர்சல்’ திரைப்படமும் அதே நிலையை சந்தித்தது. மார்ச் மாதம் தொடங்கி தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாகும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட அரசியல் கட்சியினரின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் ‘கில்லி’ திரைப்படத்தை மீண்டும் வெளியிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
