நடிகை டாப்ஸி தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘அஸ்ஸி’ திரைப்படத்தை இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கனி ஸ்குருதி, ரேவதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஊழல் நிரம்பிய அமைப்புக்கும் ஆணாதிக்க மனப்பான்மைக்கும் எதிராக போராடும் வழக்கறிஞராக டாப்ஸி இந்த படத்தில் நடித்துள்ளார். பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை மையமாகக் கொண்டு நீதிமன்ற பின்னணியில் கதை நகர்கிறது.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என ரசிகர்களிடம் டாப்ஸி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வெறும் பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல; சமூகத்தின் நிஜங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இந்தி சினிமா உண்மை சம்பவங்களுக்கு நெருக்கமான கதைகளை உருவாக்குவதில்லை என்ற காரணத்தை முன்வைத்து பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்.
இயக்குநர்களும் படக்குழுவினரும் சமூகப் பொருள் கொண்ட படங்களை உருவாக்கும் போது, அதை திரையரங்கில் சென்று ஆதரிப்பது பார்வையாளர்களின் பொறுப்பு. உலக சினிமாவுடன் போட்டியிட விரும்பினால், முதலில் நம் திரைப்படங்களை நாமே ஆதரிக்க வேண்டும். திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறாததற்காக திரைப்படத் துறையையே மட்டும் குற்றம் சாட்ட முடியாது; பார்வையாளர்களின் ஆதரவு குறைவதும் ஒரு காரணமாகும்,” என்று அவர் கூறியுள்ளார்.
