தனுஷின் ‘D56’ இதுவரை நான் முயற்சி செய்யாத புதிய கதைக்களத்தில் உருவாகிறது – இயக்குனர் மாரி செல்வராஜ்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இணைந்து உருவாக்கிய ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சமூக அரசியல் கருத்துக்களுடன் வெளிவந்த அந்தப் படம் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. ‘கர்ணன்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது தனுஷின் 56வது திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ‘Vels International’ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த திரைப்படத்தின் முன்தயாரிப்பு பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் மாரி செல்வராஜ், தனுஷின் D56 திரைப்படம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். இதுவரை தான் முயற்சி செய்யாத புதிய கதைக்களத்தில், பிரீயட், பேண்டஸி மற்றும் அரசியல் கூறுகள் கலந்த தனித்துவமான ஜானரில் இந்தப் படம் உருவாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தக் கதையின் தொடக்கம் நிகழும் இடமே அதன் நிறைவாக அமையும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ உள்ளிட்ட படங்களின் தொடக்கப்புள்ளியாக இந்த திரைப்படம் அமையும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்தப் படம் முழுக்க முழுக்க பேண்டஸி திரைப்படம் என்று கூற முடியாது என்றாலும், அதில் பேண்டஸி கூறுகள் முக்கியமாக இடம்பெறும் எனவும் மாரி செல்வராஜ் தெரிவித்தார். தற்போது இந்தத் திரைப்படம் சரியான பாதையில் பயணித்து வருவதாகவும் அவர் கூறினார். இந்தக் கதையை முதன்முதலில் தனுஷுடன் பகிர்ந்தபோது, இந்த படம் உங்கள் திரைப்பயணத்திலும், என் திரைப்பயணத்திலும் மிகப்பெரிய படைப்பாக அமைய வேண்டும் என்று தனுஷ் கூறியதாகவும் மாரி செல்வராஜ் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading