நடிகர் ராஜ்பால் யாதவ் மிகவும் நல்ல மனிதர்… சிறையிலுள்ள நடிகருக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் பிரியதர்ஷன்!

பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ் குறித்து வெளியாகியுள்ள தகவல்தான் கடந்த சில நாட்களாக பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணமாக, நடிகர் ராஜ்பால் யாதவ் கடந்த 2010ஆம் ஆண்டு ‘ஆட்டா பாட்டா லாபாட்டா’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். அந்த படத்திற்காக அவர் ஒரு பைனான்சியரிடம் ஐந்து கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாததால், வட்டியுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த வேண்டிய சூழல் உருவானது. இதற்காக அவர் வழங்கிய காசோலை, பணம் இல்லாத காரணத்தால் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து ராஜ்பால் யாதவ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக சல்மான் கான் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்கள் உதவி செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நேரத்தில் மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் ராஜ்பால் யாதவ் தன்னால் இயன்ற பொருளாதார உதவியை வழங்க முனைந்துள்ளார். அதன்படி, பாலிவுட்டில் அவர் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரைப்படத்தில் ராஜ்பால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் ஏற்கனவே பேசப்பட்ட சம்பளத்தை விட அதிகமான தொகையை ராஜ்பாலுக்கு வழங்க வேண்டும் என்றும், அது அவரது கடன் சிக்கலை ஒரு அளவுக்கு சமாளிக்க உதவும் என்றும் பிரியதர்ஷன் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த வேண்டுகோளை தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறியதாவது, “எனக்கு ராஜ்பால் யாதவ் இருபது ஆண்டுகளாக நன்கு தெரியும். அவர் மிகவும் நல்ல மனம் கொண்ட மனிதர். அவருக்கு போதிய கல்வி அறிவு இல்லாததாலேயே இந்த பிரச்சினையில் அறியாமலே சிக்கியுள்ளார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்து தனது கடனை அடைக்க எங்களால் இயன்ற உதவியை நிச்சயம் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading