சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன், தனது பள்ளி மற்றும் கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடக்கும். நாடகங்கள் மேடையேறும். ஆனால் அவற்றில் எதிலும் கலந்து கொள்ளாமல், ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவன் இருப்பான். அந்த ஒருவன் நான் தான் என்று சிரிப்புடன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். அந்த அனுபவத்திற்காக ஒருபோதும் வருத்தப்பட வேண்டியதில்லை. வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணம் வரும். அந்த ஒரு தருணம் வந்துவிட்டால், அதன் பிறகு உலகமே நம்மை கவனித்து பார்க்கும் என்று கூறினார்.
மேலும் அவர், என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், நமக்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டால் தயக்கமின்றி கேட்க வேண்டும். கேட்கும்போது ‘இல்லை’ என்ற பதில் வந்தாலும் அதனால் எதுவும் இழப்பில்லை. ஆனால் கேட்காமல் விட்டால் வாய்ப்பு கிடைக்காது. நாம் கேட்கும் போது ஏதாவது ஒன்று நடக்கக்கூடிய ஒரு சாத்தியம் இருக்கும். அதுவே முக்கியம் என்று தெரிவித்துள்ளார். பிரதீப் ரங்கநாதனின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
