செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அடுத்தடுத்த படைப்புகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், 7G 2 இந்த ஆண்டில் வெளியாகும் எனவும், புதுப்பேட்டை 2 படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2 தொடர்பாக, அது என கையில் இல்லையெனவும், பலர் இணைந்து முன்னெடுக்க வேண்டிய திட்டம் எனவும் குறிப்பிட்டார். கேப்டன் தயார் நிலையில் இருக்கிறார். ஆனால் அவர் மட்டும் தனியாக கப்பலை இயக்க முடியாது. முன்பு தொழில்நுட்ப வசதிகள், பணம், மனிதவள செலவுகள் அதிகமாக இருந்தன. தற்போது விஞ்ஞான வளர்ச்சி காரணமாக பல விஷயங்கள் எளிதாகியுள்ளன,” என விளக்கினார்.
மேலும், ஜி.வி. பிரகாஷ் குமார் உடனான தனது நட்பைப் பற்றியும் அவர் பகிர்ந்தார். நானும் ஜி.வி. பிரகாஷும் பல ஆண்டுகளாக நல்ல நண்பர்கள். எப்போது சந்தித்தாலும் அந்த சந்திப்பு உயிரோட்டமாய் இருக்கும். என் இயக்கத்தில் அவர் நடிப்பது குறித்து பலமுறை பேசினோம். ஒருநாள் ‘மென்டல் மனதில்’ திரைக்கதையை அவரிடம் வாசிக்கக் கொடுத்தேன். படித்தவுடன் உடனே செய்யலாம் என்று ஆர்வமாக முன்வந்தார். அன்றே அந்த திட்டம் தொடங்கியது என்று தெரிவித்தார்.
சினிமா ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்த அவர், காதல், ஆசை, கோபம் போன்ற உணர்வுகளுடன் ஒரு செல்வா இருந்தான். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் அந்த உணர்ச்சிகள் வெளிப்பட்டன. காதலின் பல பரிமாணங்களை நான் சொல்லியுள்ளேன். இப்போது ஜென் Z தலைமுறையின் காதலை ‘மென்டல் மனதில்’ மூலம் சொல்ல விரும்புகிறேன் என்றார்.
மேலும் தனுஷ் குறித்து பேசிய அவர், D55, D56 என்று தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பதை பார்த்து நான் ஆச்சரியப்படுவேன். ஒருநாள் அவரிடம் ‘இப்படி எப்படி முடிகிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘வேற என்ன செய்யலாம் சொல்லுங்கள்’ என்று பதிலளித்தார். அது ஒரு ஆசீர்வாதம் போல உணர்ந்தேன். முன்பு நடிகர்களிடம் நடிப்பின் அளவு குறித்து கடுமையாக இருந்தேன். ஆனால் நடித்து பார்க்கும்போது தான் அதன் சிரமம் முழுமையாக புரிகிறது,” என்று கூறினார்.
