கடந்த சில ஆண்டுகளாக பழைய தமிழ் திரைப்படங்கள், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’, கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜய் நடித்த ‘கில்லி’, அஜித்தின் ‘மங்காத்தா’, சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்தன.
இந்த சூழலில், வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ மற்றும் மாதவன் நடித்த ‘மின்னலே’ ஆகிய திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு திரைப்படம் இணைந்துள்ளது. இயக்குநர் கதிர் இயக்கிய ‘காதலர் தினம்’ திரைப்படம், காதலர் தினத்தன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தற்போது இந்த படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியான ‘காதலர் தினம்’ திரைப்படத்தில் நடிகர் குணால் கதாநாயகனாகவும், பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இப்படத்தில் இடம்பெற்ற ‘காதலெனும் தேர்வெழுதி’ மற்றும் ‘ரோஜா ரோஜா’ ஆகிய பாடல்கள், இன்றளவும் காதலர்களால் கொண்டாடப்படும் காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
