விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த படம் ‘சக்தி திருமகன்’ கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம், விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கையில் 25வது படமாக அமைந்தது. இந்த படத்திற்கு தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஒரே நேரத்தில் விஜய் ஆண்டனியே பணியாற்றியிருந்தார். ‘சக்தி திருமகன்’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, தற்போது அவர் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் ‘நூறு சாமி’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இயக்குநர் சசியின் இயக்கத்தில் ஏற்கனவே ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தில் நடித்திருந்த விஜய் ஆண்டனி, அதன் இரண்டாம் பாகமான ‘பிச்சைக்காரன் – 2’ படத்தை தானே இயக்கியும் நடித்தும் வெளியிட்டிருந்தார். ‘பிச்சைக்காரன்’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனியிடம், ‘பிச்சைக்காரன் – 3’ படம் உருவாகுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘பிச்சைக்காரன் – 3’ திரைப்படம் நிச்சயமாக உருவாகும் என்றும், அது ‘பிச்சைக்காரன் – 2’ படத்தை விட மிகப் பெரிய அளவில், பிரமாண்டமாக உருவாகும் என்றும் கூறினார். மேலும், குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், ‘கேஜிஎப்’ படத்தைப் போல பிரம்மாண்டமான படமாக இருக்கும் என விஜய் ஆண்டனி தெரிவித்தார்.
