தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஆழி’. இந்த படத்தில், இந்திரந்த் ஜெகஜித், தேவிகா, வையாபுரி, தாமரை, பிர்லா போஸ், மைதிலி சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை, மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘ஆழி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார், நடிகர்கள் சினிமா படங்கள், ஓடிடி படங்கள் என வித்தியாசம் பார்க்கக் கூடாது என்றார். எந்த ஊடகமாக இருந்தாலும், அதில் நடித்தால் சிறந்த நடிப்பை வழங்க வேண்டும் என்பதே முக்கியம் என்றும், கால ஓட்டத்திற்கும் மாற்றங்களுக்கும் ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்மறை கதாபாத்திரங்கள் குறித்து பேசுகையில், “எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது நான் நிறைய கேள்விகள் கேட்பேன். ஆனால் அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள்தான் பெரும்பாலும் அதிகமாக பெயர் வாங்குகிறார்கள். ‘புஷ்பா-2’ படத்தில் கதாநாயகன் செம்மரக்கட்டை கடத்துபவராக இருந்தாலும், ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இதுதான் சினிமா. இங்கே எதுவும் நடக்கலாம்” என்று சரத்குமார் கூறியுள்ளார்.
