கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சிவராஜ்குமார். இவர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், சிவராஜ்குமார் ரஜினிகாந்த் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
முதலில், ராம் சரணுடன் ‘பெத்தி’ திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்து கேட்கப்பட்டபோது, “அது மிகவும் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரம். தொடக்கம் முதல் உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் வரை அந்த கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நான் கதாநாயகனுக்கு துணை பாத்திரத்தில் நடித்துள்ளேன். எங்கள் இருவரின் கதாபாத்திரங்களுக்கு இடையேயான பிணைப்பு, கதைக்கு கூடுதல் ஆழத்தை அளிக்கிறது. ராம் சரணுடன் பணிபுரிவது மகிழ்ச்சியான அனுபவம். அவர் தனது தந்தை சிரஞ்சீவி போலவே பண்பும் பணிவும் கொண்டவர் என்று தெரிவித்தார்.
‘ஜெயிலர் 2’ குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவராஜ்குமார், ரஜினி சாருக்கும் எனக்கும் படப்பிடிப்பு தளத்தில் நல்ல நட்பு உருவாகிவிட்டது. எஸ்.ஜே.சூர்யா அடிக்கடி நகைச்சுவையாக, ‘வாய்ப்பு கிடைத்தால் போதும், இந்த இருவரும் உறவினர்களைப் போல பேச ஆரம்பித்து விடுவார்கள்’ என்று சொல்வார். ஒரு விதத்தில் அது உண்மைதான். நான் மெட்ராஸில் வாழ்ந்த காலத்திலேயே அவர் சூப்பர் ஸ்டாராக உயர்வதை பார்த்து வளர்ந்தேன். அவர் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், எப்போதும் பணிவுடன் தான் இருப்பார். அவர் என் தந்தையுடன் நெருங்கிய நட்பை கொண்டிருந்தார். மேலும், அவர் பெங்களூருவுக்கு வரும் ஒவ்வொரு முறையும், எங்கள் வீட்டிற்கு வருவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார்,” என்று கூறினார்.
