மனோ கிரியேஷன் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்துள்ள திரைப்படம் ‘போர்த் புளோர்’. இந்த படத்தை எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கியுள்ளார். ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ‘மார்கன்’, ‘மார்க்’ ஆகிய படங்களில் நடித்த தீப்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதனைத் தவிர, பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தருண்குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘போர்த் புளோர்’ திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படம் குறித்து இயக்குநர் பேசுகையில், “இந்த திரைப்படம் கனவுகளுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஒரு பாலமாக இணைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட இந்த படம் ‘யூ/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது. முகம் சுளிக்க வைக்காத வகையிலும், குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்து பார்க்கக்கூடிய படமாகவும் இது உருவாகியுள்ளது. பிரச்சனைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம்; ஆனால் அவற்றை எதிர்கொள்ள நாம் தான் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை, அதன் திரைக்கதை போக்கிலேயே சொல்லியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
