இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ திரைப்படம், உலகளவில் வெளியாகவுள்ள மிகப் பெரிய படைப்பாக உருவாகி வருகிறது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மட்டுமல்லாமல், உலக சினிமா ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் இந்தியாவைத் தவிர, கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு புவியியல் சூழல்களை கதைக்கேற்ப பயன்படுத்தி, படத்தை சர்வதேச தரத்தில் உருவாக்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ‘வாரணாசி’ திரைப்படத்தின் சில காட்சிகள் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், அண்டார்டிகாவில் படமாக்கப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற புதிய சாதனையை ‘வாரணாசி’ படைக்கும். இதன் மூலம் இந்திய சினிமாவின் எல்லைகளை உலகின் கடைசி கண்டம் வரை விரிவுபடுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
