‘இருவர்’ திரைப்படம் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், என்னை ஒரு நடிகனாக மக்கள் ஏற்றுக்கொள்ள வைத்தது – நடிகர் பிரகாஷ்ராஜ்!

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் பிரகாஷ் ராஜ், சமீப காலத்தில் கேரளாவில் நடைபெற்ற Mathrubhumi International Festival of Letters மற்றும் Wayanad Literature Festival ஆகிய இலக்கிய விழாக்களில் பங்கேற்றார். அந்த நிகழ்வுகளின் போது ரசிகர்கள் மற்றும் கலந்துகொண்டவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் விரிவாக பதிலளித்தார். இந்த இரண்டு நிகழ்வுகளிலும், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், அந்த படம் எனக்கு மிகவும் வித்தியாசமானவும் சுவாரஸ்யமானவும் இருந்தது. நான் அந்த திரைப்படத்தில் நடித்தபோது எனது வயது சுமார் 30. நான் கர்நாடகாவை சேர்ந்தவன். அப்போது எனக்கு தமிழ் மொழி தெரியாது, திராவிட இயக்கத்தின் வரலாறு பற்றிய புரிதலும் இல்லை. அந்த காலகட்டத்தில் அந்த படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘ஆனந்தன்’. எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால்  சுமார் எட்டு மாதங்களாக ஆராய்ச்சியும் தயாரிப்பும் செய்து வந்தார். அவர் ஏற்கனவே இரண்டு ஷெட்யூல்கள் நடித்து முடித்திருந்த நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கான மற்றொரு நடிகரை மணிரத்னம் தேடிக் கொண்டிருந்தார் என தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், அந்த நேரத்தில் நான் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவான ‘ஆசை’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதற்கிடையில் ‘இருவர்’ படத்திற்காக ஸ்க்ரீன் டெஸ்டும் கொடுத்தேன். அதே சமயம், மம்முட்டி, நானா படேகர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. ஆனால் பல காரணங்களால் அவர்கள் யாரும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், இளம் வயது கருணாநிதியாக நான் பொருத்தமாக இருப்பேன்; ஆனால் வயதான கட்டத்தில் என் தோற்றம் பொருந்தாது என மணிரத்னம் ஆரம்பத்தில் நினைத்தார். இருப்பினும், என்னை அழைத்து ‘நாளை மறுநாள் ஷூட்டுக்கு வந்து விடுங்கள்’ என்று சொன்னார். எனக்கு தயாராக இருந்தது வெறும் இரண்டு நாட்கள்தான். மேலும், மற்றவர்களைப் போல அப்படியே பின்பற்றிப் நடிக்கும் திறன் எனக்கு இல்லை என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, கலைஞர் கருணாநிதியின் உயரம், நிறம், அல்லது அவர் பேசும் தூய தமிழ் நடை போன்றவை என்னிடம் இல்லை. அதனால் மணிரத்னத்திடம் நான், ‘மணி, என்னால் ஒருவரை அப்படியே நகலெடுக்க முடியாது. நீங்கள் எழுதும் தமிழின் ஒலியை நான் கன்னடத்தில் எழுதி வைத்துக் கொண்டு, அதை மனதில் வைத்து பேசிப் பார்க்கிறேன். அது உங்கள் கதையை சரியாக சொல்லுகிறதா என்று பாருங்கள்’ என்று சொன்னேன். அந்த நேரத்தில் எனக்கு அரசியல் சார்ந்த புரிதல் பெரிதாக இல்லை. ஒரு நடிகனாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆசையுடன் முயற்சி செய்யும் ஒரு இளைஞனாகத்தான் இருந்தேன். அந்த கதாபாத்திரம் எனக்கு இயல்பாகவே வந்து சேர்ந்தது. அதே நேரத்தில், நடிப்பில் நான் முழுமையான நேர்மையுடன் இருந்தேன். இப்போது அந்த நடிப்பை மீண்டும் பார்க்கும்போது, ‘இதை எல்லாம் நாம் எப்படி செய்தோம்?’ என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

அவர் உரையை தொடர்ந்து, ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது, உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் போன்ற தமிழ் கவிதைகளை உச்சரித்து நடிப்பது, திராவிட இயக்கத்தின் வரலாறு சிறந்த பேச்சுகளின் மூலம் வளர்ந்தது என்பதை புரிந்துகொண்டது போன்றவை ‘இருவர்’ படத்தை எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக மாற்றின. மேலும் அந்த படத்திற்காக கிடைத்த தேசிய விருது, இந்தப் பையன் நடிப்பில் இன்னும் தூரம் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்தது. அந்த காலகட்டத்தில், ஒரு நடிகனாக நான் அறியப்பட வேண்டும் என்ற தீவிரமான பசி எனக்குள் இருந்தது; இன்று அதன் அரசியல் பின்னணியையும் நான் உணர்ந்து கொண்டுள்ளேன். ‘இருவர்’ படம் வெளியான அன்றே அந்த படம் தோல்வி என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் காலப்போக்கில் அந்தப் படத்தை மக்கள் அதிகம் நேசிக்கத் தொடங்கினர். அந்த படம் எனக்கு பெரிய வணிக வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், என்னை ஒரு நடிகனாக மக்கள் ஏற்றுக்கொள்ளவும், அதைவிட முக்கியமாக நானே என்னை ஏற்றுக்கொள்ளவும் உதவியது. என் உள்ளார்ந்த வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திய படம் அது” என்று மனதார பகிர்ந்து கொண்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading