தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், ஒரு தீவிரமான கார் பந்தய வீரராகவும் வலம் வருகிறார் அஜித்குமார். ‘குட்பேட் அக்லி’ திரைப்படத்திற்கு பிறகு, அவர் முழு கவனத்தையும் கார் ரேசிங்கில் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய அணியையும் நிறுவியுள்ளார்.
அஜித்குமார் ரேசிங் அணி துபாய், பெல்ஜியம், ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளது. இன்னும் பல்வேறு சர்வதேச பந்தயங்களில் பங்கேற்க அஜித்குமார் திட்டமிட்டு வருகிறார். அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் தனது அணியினருடன் அஜித்குமார் பங்கேற்று வருகிறார். தற்போது, 24 ஹெச் சீரிஸ் – மத்திய கிழக்கு டிராபிக்கான பந்தயத்தில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.
அஜித்குமார்-ஐ திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் சிம்பு, யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஜி.வி.பிரகாஷ், மாதவன், விக்னேஷ் சிவன், நயன்தாரா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் அவரை சந்தித்தனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் அஜித்குமாரை நேரில் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
