இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் பயோபிக் திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என்று முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் தனுஷ் இரண்டாவது முறையாக அருண் மாதேஸ்வரனுடன் இணைவதாக அந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு அறிவிப்பு வெளியான பின்னர், அந்த திரைப்படம் தொடர்பாக எந்த புதிய தகவல்களும் வெளிவராத நிலையில், கடந்த சில நாட்களாக இப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இயக்குநரை மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதற்கு இடையே, இப்படத்தின் இயக்குநர் மாற்றம் தொடர்பான செய்திகளை முற்றிலும் மறுக்கும் வகையில், பிஆர்ஓ ரியாஸ் அகமது விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கமாட்டார் என்ற தகவல்கள் அனைத்தும் உண்மையற்றவை என்றும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘டிசி’ திரைப்படத்தை முடித்தவுடன், முன்பே திட்டமிட்டபடியே இளையராஜா பயோபிக்கான பணிகளை அருண் மாதேஸ்வரன் தொடங்குவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
