விஜய் ஆண்டனி நடிகர் அஜய் திஷான் நடிப்பில் தயாரித்துள்ள திரைப்படம் ‘பூக்கி’. ‘சலீம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ்சந்திரா, இந்த படத்தின் மூலம் இயக்குநராக தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். மருமகனை வைத்து ‘மார்கன்’ படத்திற்கு பிறகு ஏன் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தேன் என்பதைக் குறித்து விஜய் ஆண்டனி தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், “இந்த படத்தின் இயக்குநரை முதலில் ஒரு ஒளிப்பதிவாளராக நான் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மிகுந்த பெருமை. அதே நபரை இன்று இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவதில் இன்னும் அதிகமான மகிழ்ச்சி கிடைக்கிறது. மலையாள சினிமாவைப் போல தமிழ் சினிமாவிலும் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், புதிய பரிதி ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இந்த படத்திற்கு பிறகு அவர் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை அடைவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறினார்.
மேலும் அவர், இந்த படத்தின் ஹீரோ அஜய் மிகவும் நேர்மையானவர், கடுமையாக உழைப்பவர். முதலில் அவர் ஒரு நல்ல மனிதர், அதனால்தான் அவர் ஒரு நல்ல நடிகராகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக உயர்ந்த நிலையை அடைவார். ஹீரோயின் மிகுந்த புத்திசாலித்தனமும் திறமையும் கொண்ட நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு என அனைத்திலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த படம் அவருக்கு பல புதிய வாய்ப்புகளை கொண்டு வரும்” எனவும் தெரிவித்தார்.
அதேபோல் ‘நூறுசாமி’ படத்திலும் அஜய் திஷானின் நடிப்பை அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நடிகர் அஜய் திஷான், இந்த படம் எனக்கு ஒரு சாதாரண திரைப்படமாக இல்லை. என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு முக்கியமான அனுபவமாக இதை பார்க்கிறேன். நான் ஒருபோதும் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இந்த படத்தின் மூலம் எனக்கு நிகழ்ந்துள்ளன. விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்தார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, நான் நன்றாக பாடுவேன். விஜய் ஆண்டனி என்னை பாட வைக்க வேண்டும் என்று கூறியதும் கவனம் பெற்றுள்ளது.
