நேர்மையாகவும் கடமை உணர்வுடனும் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டராக சாய் தன்ஷிகா இந்த படத்தில் வருகிறார். அவரது நேர்மையான செயல்பாடுகளுக்காகவே அடிக்கடி டிரான்ஸ்பர் ஒரு விதமான பரிசாக அவருக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், அவர் சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணியில் சேர்கிறார். அந்தப் பகுதியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அடிதடி, கொலை, போதை மருந்து வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு அராஜகம் செய்யும் வில்லன் கபீர் துஹான் சிங்குக்கும், தன்ஷிகாவுக்கும் இடையே பிரச்சினை உருவாகிறது. மத்திய அமைச்சராக இருக்கும் தனது அண்ணன் ஷாயாஜி ஷிண்டே ஆதரவுடன், வில்லன் பல்வேறு வழிகளில் தன்ஷிகாவை துன்புறுத்துகிறான். அந்த அண்ணன்–தம்பிகளுக்கு எதிராக, தனது அதிரடி பாணியில் தன்ஷிகா எவ்வாறு பதிலடி கொடுக்கிறார் என்பதே ‘யோகிடா’ படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தன்ஷிகா நடித்த கதாபாத்திரத்தின் பெயர் யோகேஸ்வரி என்பதாலேயே இப்படத்திற்கு இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அந்தகால விஜயசாந்தி படங்களை நினைவூட்டும் வகையில், தன்ஷிகாவை மையமாக வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை உருவாக்க இயக்குநர் கவுதம் கிருஷ்ணா முயற்சி செய்துள்ளார். இந்த முயற்சியில் அவர் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார் என்றே கூறலாம். காரணம், அதிரடி போலீஸ் கதாபாத்திரத்திற்கு தன்ஷிகா மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளார். குறிப்பாக, அவரது கிராப் ஹேர்ஸ்டைல், மிடுக்கான தோற்றம், ஆக்ஷன் காட்சிகளில் வெளிப்படும் வேகம், ஸ்டைலிஷான நடிப்பு, காட்சிகளுக்கேற்ற வசனங்கள் ஆகியவை ஓரளவு செட்டாகி இருக்கின்றன. மேலும், ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நேரடியாக அவர் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்குள் இப்படியொரு அதிரடி திறமை இருக்கிறதா என ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அவரது முயற்சி கவனம் பெறுகிறது. ஆனால், கதை அமைப்புதான் படத்தை பின்னோக்கி இழுக்கும் முக்கிய காரணமாக மாறுகிறது.
பல படங்களில் பார்த்து பழகிய அதே தாதா வில்லன் மாதிரியான கதாபாத்திரமே இங்கும் வருகிறது. அவரது கொடூர கொலைகள், போலீஸ் இன்ஸ்பெக்டரையே கொல்வது, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவு இருப்பது, பெண்கள் மீது வன்முறை செலுத்துவது, எதிரிகளை கொல்ல அடியாட்களை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கின்றன. தாதா கதாபாத்திரத்திற்கு கபீர் துஹான் சிங் பெரிதாகப் பொருந்தவில்லை. அவருக்கு ஆதரவாக, அண்ணனாக ஷாயாஜி ஷிண்டே வருகிறார். அவரையும் தம்பியுடன் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் வகையில் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர். அந்த கதாபாத்திரங்களுக்கான முடிவை மட்டும் சற்று புதுமையாக படமாக்கியிருப்பது ஓரளவு பிரஷ்ஷாகத் தோன்றுகிறது.
மறைந்த நடிகர் மனோபாலாவை நல்ல போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் காண முடிகிறது. அவரது கெட்-அப் மற்றும் மென்மையான நடிப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால், அவர் மறைந்துவிட்ட காரணத்தால் வேறு ஒருவரை வைத்து டப்பிங் பேச வைத்திருப்பது, அவரது நடிப்பின் இயல்பை பாதிக்கிறது. வழக்கம்போல் ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி கதையில் இடம்பெறுகிறார். வில்லன்களின் அடியாட்கள் அவ்வப்போது வந்து சண்டை போட்டு கை, கால்களை உடைத்துக்கொண்டு திரும்புவது போன்ற காட்சிகளும் வருகின்றன. நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு எதிராக பல சதிகள் அமைக்கப்பட்டு, அவரது வேலையும் பறிக்கப்படுகிறது. இவ்வாறாக, பரிச்சயமான பாதையிலேயே ‘யோகிடா’ படம் பயணிக்கிறது.
இந்த படத்தில் தனியான ஹீரோ கதாபாத்திரம் இல்லை. காதல், நகைச்சுவை போன்ற அம்சங்களும் இடம்பெறவில்லை. ஆனால், பைட் மாஸ்டர் கணேஷ் செய்த பணியை பாராட்டாமல் இருக்க முடியாது. தன்ஷிகாவுக்காக அவர் வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகள் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளன. சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி, பல அதிரடி சண்டைக் காட்சிகளை அவர் வழங்கியுள்ளார். தன்ஷிகாவின் ஆர்வமும், கடுமையான உழைப்பும் அந்த சண்டைக் காட்சிகளை இன்னும் பவர்ஃபுலாக மாற்றியுள்ளது. போலீஸ் யூனிஃபார்மிலும், மப்டியிலும் அவர் அடித்து துவைக்கும் காட்சிகள் ரசிக்கத்தக்கதாக உள்ளன. படத்தில் உண்மையில் உருப்படியாகத் தோன்றும் அம்சம் இதுவே. தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தன்ஷிகா போடும் சண்டைக் காட்சியும், தேசியக் கொடி குறித்து அவர் பேசும் வசனங்களும் பாராட்டுக்குரியவை. அவற்றை ஒளிப்பதிவாளர் எஸ்.கே. பூபதி சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். விஜயசாந்தி மாதிரி ஒரு பெண் ஆக்ஷன் நாயகியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் சரியானதே. ஆனால், அதற்கு ஏற்ற வலுவான கதையையும், காட்சிகளையும் அமைக்க இயக்குநர் தவறிவிட்டார். இருப்பினும், தன்ஷிகா கதாபாத்திரத்தை வைத்து ஒரு முக்கியமான கருத்தை சொல்ல முயற்சி செய்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு தெளிவாக புரிகிறது.
